உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அதில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
சுமார் 17 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் எளிதாக இருக்கும் என நினைத்த நிலையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் மீட்பு படையினர். சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் பைப் மூலம் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் பரிதுரைக்கும் உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க ரம்மி, லூடோ, செஸ் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டன. இதோடு இல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் கேமிரா மூலம் அவர்களுடன் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
துளையிடும் போது கான்கிரீட் கம்பிகள் குறுக்கே இருந்ததால் அகர் இயந்திரம் பழுதடைந்தது. 26 ஆம் தேதி காலை முதல் செங்குத்தாக துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல், சுரங்கப்பாதையின் உள்ளே இயந்திரம் இல்லாமல் மனித சக்தி மூலம் துளையிடும் பணி நடந்து வருகிறது, மேலும் குழாயை உள்ளே செலுத்த ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 2 மீட்டர் கையால் துளையிடும் பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் இருந்து 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாயின் 43 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள வேலையை முடிக்க இன்னும் 40-50 மணிநேரம் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து 8 மிமீ விட்டம் கொண்ட குழாயின் 78 மீட்டர் செங்குத்து துளையிடும் பணியும் நிறைவடைந்ததுள்ளது. குழாயில் சிறிய பிரச்சனை ஏற்பட்டதால், தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் உள்ளே மனித சக்தியால் துளையிடும் பணி சீராக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ” மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 52 மீட்டர் துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில மீட்டர்கள் மட்டுமே உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும்” என குறிப்பிட்டுள்ளார்.