Telangana Election 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைவதால், பிரதமர் மோடி தொடங்கி காங்கிரசின் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். 


தெலங்கானா தேர்தல் 2023:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக தான், தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் கருதப்படுகிறது. மிசோரம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாகவும், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே மாநிலமாகவும் தெலங்கானாவில் வரும் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியில் இல்லாத நிலையில், தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சியும், முதல்முறையாக ஆட்சி அமைக்க காங்கிரசும் மல்லுக்கட்டி வருகின்றன.


அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை: 


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தெலங்கானாவில் பரப்புரையில் அனல் பறக்கிறது. பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவ, ஒவ்வொருவரும் மாறி மாறி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்து வருகின்றன. பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதோடு, இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் விதமான நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளையும் அரசியல் கட்சிகள் குவிக்கின்றன. ஓட்டலில் இறங்கி தோசை சுடுவது தொடங்கி குளித்துக் கொண்டிருந்தவருக்கு சோப்பு போடுவது வரையிலான வேலைகளை எல்லாம் செய்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.  காங்கிரஸ் தொடங்கி பாஜக வரை தேசிய தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி, அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி என பலரும் தெலங்கானாவில் தீவிர பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.


முகாமிட்டுள்ள தலைவர்கள்:


இந்நிலையில், தெலங்கானா மாநில தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று ரோட் ஷோவில் ஈடுபட்டார்.  சாலையின் இருமார்க்கங்களில் ஏராளமான பாஜகவின் குவிந்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து இன்று பாஜக முக்கிய தலைவர்களான ஜே.பி. நட்டா, அமித் ஷா, அனுராக் தாக்கூர் மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பலரும் கடைசி நாளான இன்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளனர். மறுமுனையில் காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இன்று பரப்புரையில் ஈடுபடுகின்றனர். ஐதராபாத் ஓல்ட் சிட்டியில் ராகுல் காந்தி இன்று வாக்கு சேகரிக்க உள்ளார். முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமாரவ், மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா ஆகியோரும் இன்று மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். மறுமுனையில் இந்த தேர்தலில் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும்,  ஐதராபாத் எம்.பி. ஓவைசியும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடுகிறார். பரப்புரையின் கடைசி நாளான இன்று வாக்காளர்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் முகாமிட்டுள்ளதால், தெலங்கானாவில் தேர்தல் காய்ச்சல் உச்சத்தை எட்டியது.