ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி இன்று இடிக்கப்பட்டுள்ளது. உலகையே சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக பாலசோரில் அரசு நடத்தும் பஹனகா உயர்நிலைப் பள்ளி தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்டது.


பள்ளிக்கு திரும்ப பயப்படும் மாணவர்கள்:


தற்போது இந்த பள்ளிக்கு திரும்ப மாணவர்களும் பெற்றோர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்க பள்ளி நிர்வாகம் ஒடிசா அரசுக்கு கோரிக்கை விடுத்தது. பள்ளி கட்டிடம் பாதுகாப்பாக இல்லை என்றும், இந்த சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் மாநில அரசிடம் விளக்கம் அளித்திருந்தது.


கடந்த ஜூன் 2ஆம் தேதி விபத்து நடந்ததை தொடர்ந்து, 65 ஆண்டு காலம் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடத்திற்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டது. இறந்த உடல்கள் வைக்கப்பட்ட பள்ளிக்கு திரும்ப, மாணவர்கள் தயங்கி வருவதாக கூறிய பஹனகா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா ஸ்வைன், "ரயில் விபத்தைத் தொடர்ந்து பள்ளியைச் சேர்ந்த சில மூத்த மாணவர்களும் என்சிசி மாணவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


ஆனால், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு திரும்ப மாணவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். அவர்களின் பயத்தைப் போக்க பூஜைகள் மற்றும் சில சடங்குகளை நடத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டது" என்றார்.


பள்ளி கட்டிடத்தை இடித்து தள்ளிய அரசு:


நேற்று பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ரயா பௌசாஹேப் ஷிண்டே, "பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியை, பிற பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்தேன். அவர்கள் பழைய கட்டிடத்தை இடித்து அதை புதுப்பிக்க விரும்புகிறார்கள். அப்போதுதான், வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பயம் இருக்காது" என்றார்.


கடந்த வெள்ளிக்கிழமை, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


கோர விபத்து:


இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது.


 






ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் உள்ள பஹனகா உயர்நிலைப் பள்ளியில்தான் உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை அடுத்து, பிணவறையில் வைக்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.