கடந்த காலத்தில் சிறுமிகள் 17 வயதிற்குள் ஒரு குழந்தையையாவது பெற்றெடுப்பார்கள். இது பற்றி மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது என குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


சர்ச்சை கருத்துகளை தெரிவிக்கும் நீதிமன்றங்கள்:


சமீப காலமாக, நீதிபதிகள் சிலர் சர்ச்சையான தீர்ப்புகளை வழங்குவதும், அவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என கண்டறிய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.


அதற்கு முன்பாக, பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 


அதன் தொடர்ச்சியாக, தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, கடந்த காலத்தில் சிறுமிகளுக்கு 14 முதல் 16 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறினார்.


"சிறுமிகள் குழந்தை பெற்று கொள்வது இயல்புதான்"


பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, தன்னுடைய மகளின் 7 மாத கர்ப்பத்தை கலைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிக்கந்தர் சையத், "சிறுமிக்கு தற்போது 16 வயது மற்றும் 11 மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் இந்த கர்ப்பம் அவரது மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என வாதம் முன்வைத்தார்.


இதற்கு பதிலளித்த நீதிபதி சமீர் தவே, "கடந்த காலத்தில் 17 வயதிற்குள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது பெற்றெடுத்துவிடுவார்கள். நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். உங்கள் தாயிடமோ அல்லது பாட்டியிடமோ போய் கேளுங்கள். முன்பெல்லாம் 14 முதல் 16 வயதுக்குள் சிறுமிகளுக்கு கல்யாணமாவது இயல்பு என சொல்வார்கள். 17 வயதை எட்டினால், அவர்கள் குறைந்தது ஒரு குழந்தையையாவது பெற்றெடுப்பார்கள்.


சிறுவர்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே சிறுமிகள் முதிர்ச்சியடைந்து விடுகிறார்கள் என சொல்ல வருகிறேன். நான்கைந்து மாதங்கள் என்பது பெரிய வித்தியாசம் இருக்காது. மனுஸ்மிருதியில் இருக்கிறது. நீங்கள் இதைப் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு முறை இதைப் படியுங்கள்" என்றார்.


இதையடுத்து, மருத்துவக் கண்காணிப்பாளர் குழுவை அமைத்து சிறுமியையும் கருவையும் பரிசோதிக்க ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவ ரீதியாக கருவை கலைக்க அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை தெளிவாக ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மருத்துவ வாரியத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.