Coromandel Express Accident : சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பிய ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.


எத்தனை பேர் உயிரிழப்பு?


இந்த கோர விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் சென்னைக்கு ரிசர்வ் செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கை 869 ஆகும். பதிவு செய்யாமல் ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியவில்லை.


தற்போது வரை, அந்த விபத்து நடந்த பாதையில் செல்லவிருந்த 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்.


"ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது, மற்ற குழுக்களும் மீட்பு பணியில் இணைய விரைந்துள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


விபத்து நடந்தது எப்படி?


இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா, "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என்றார்.


இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.


"ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.