கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது சிபிஐ அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


உலகை சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா ரயில் விபத்து:


இந்திய ரயில்வேஸில் பணியாற்றி வரும் மூன்று அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த விபத்துக்கு சதி செயல் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டிலும் அருண் குமார் மஹந்தா, முகமது அமீர் கான், பப்பு குமார் ஆகிய மூன்று ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில், அருண் குமார் மஹந்தா, சீனியர் செக்சன் இன்ஜினியராகவும் முகமது அமீர் கான், செக்சன் இன்ஜினியராகவும் பப்பு குமார் டெக்னீஷியனாகவும் பணியாற்று வந்துள்ளனர். இந்த மூவரின் நடவடிக்கையே விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.


அதிரடி காட்டிய சிபிஐ:


தங்களின் செயல்கள் இந்த மாதிரியான விபத்தை ஏற்படுத்தும் என அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதால் மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்றே செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். 


இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த வாரம் ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், "விபத்து நேரிட்ட நாளில் பாஹாநாகர் பஜார் ரயில் நிலையம் அருகே உள்ள இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. எனவே பிரதான தண்டவாளம் வழியாக கோரமண்டல் ரயில் கடந்து சென்றிருக்க வேண்டும்.


ஆனால், தவறான சிக்னல் காரணமாக இணைப்பு தண்டவாளத்தில் செல்ல கோரமண்டல் ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் ஸ்டேஷன் மாஸ்டரின் பேனலில் பிரதான தண்டவாளம் வழியாகவே கோரமண்டல் ரயில் கடந்து செல்லும் என்று காட்டப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டேஷன் மாஸ்டரால் சிக்னல் கோளாறை கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரணையின்படி, தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது.


2018ஆம் ஆண்டில் சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது சிக்னல் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தென் கிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் பிரிவில் இதேபோல சிக்னல் கோளாறு கண்டறியப்பட்டது.


இதற்கு தவறான வயரிங்கே காரணம். அப்போதே விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஹாநாகா பஜார் பகுதியிலும் இதேபோல சிக்னல் கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை. எனவே, மனித தவறால் விபத்து ஏற்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.