அவ்வப்போது அடிச்சது லக்கி ப்ரைஸ் போல் மீனவர்கள் வலையில் நல்ல வேட்டை மாட்டுவதுண்டு. அப்படித்தான் ஒரிசாவில் பாலாசோர் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரியவகை மீன் ஒன்று மாட்டிக் கொண்டது. செய்லர் மார்லின் மீன் என்றழைக்கப்படும் இந்த மீன் ரூ.1 லட்சத்துக்கு விலை போனது. இதன் எடை 550 கிலோ.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி பார்த்தசாரதி ஸ்வெய்ன் கூறுகையில், இந்த வகை மீன் மிகவும் அரியது. இதன் உடலின் எச்சங்கள் மன அழுத்த நிவாரணி மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த மீனை தமிழ்நாட்டில் கொப்பரக்குல்லா என்று அழைக்கின்றனர். இது இஸ்டியோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த மீன் ஆகும். இதில் 10க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொப்பரக்குல்லா மீனானது நீளமான உடலையும், ஈட்டி போன்ற கூரான மூக்கையும், தலையில் குல்லா வைத்தது போன்ற முதுகுத் துடுப்பையும் கொண்டது. இதன் முதுகுத் துடுப்பு பின்னோக்கி வரவர சிறுத்து மறையும். இதன் பொதுப் பெயரான மார்லின் என்றது மாலுமி மார்லின்ஸ்பைக்குடன் உள்ள ஒற்றுமையிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.
கொப்பரக்குல்லா மீன் வேகமான கடல் மீன்களில் ஒன்றாகும், குறுகிய நேரத்தில் மணிக்கு 110 கிமீ (68 மைல்) வேகத்தை அடையும். ஆனால் இதை மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம் என்று சில தரவுகள் கூறுகின்றன.
இவற்றில் பெரிய இனங்களில் அட்லாண்டிக் நீல மார்லின், மகைரா நிக்ரிகன்ஸ் இனம் அடங்கும், அவை 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 818 கிலோ (1,803 எல்பி) எடைவரை வளரும். மற்றும் கருங்கொப்பரான் அது 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 670 கிலோ (1,480 எல்பி) எடை வரை வளரும். இவை வெப்பமண்டல பகுதிகளில் பிரபலமான மீன்பிடி விளையாட்டு மீன்களாகும். அட்லாண்டிக் நீல கொப்பரான் மற்றும் வெள்ளை கொப்பரான் ஆகியவை அதிகப்படியான மீன்பிடித்தலால் அழிந்து வருகின்றன.