ஒடிசா மாநிலத்தில் தற்போது மோகன் சரண் மஜ்ஹி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் ஆளுநராக ரகுபர்தாஸ். இவரது லலித் தாஸ். கடந்த வாரம் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


அரசுப் பணியாளரை தாக்கிய ஆளுநர் மகன்:


அப்போது, அவரைச் சந்திப்பதற்காக ஆளுநரின் மகன் லலித்தாஸ் வெளியூரில் இருந்து ரயில் மூலமாக வந்துள்ளார். ஆனால், ஆளுநரின் மகன் லலித்தாசை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக மாருதி கார் ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.


இதனால், ஆத்திரமடைந்த ஆளுநர் மகன் லலித்தாஸ் ஆளுநர் மாளிகை பணியாளர் பைகுந்த பிரதான் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, பைகுந்த பிரதானின் மனைவி சயோஜ் பூரி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


நடந்தது என்ன?


காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, “ கடந்த 7ம் தேதி இரவு ஆளுநர் மகன் எனது கணவரை அவரது அறைக்கு அழைத்தார். அங்கு அவரை சரமாரியாக தாக்கினார். அவர் வெளியில் ஓடி வந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். ஆனாலும், இரண்டு நபர்கள் அவரை உள்ளே இழுத்துச் சென்று மீண்டும் தாக்கினார்கள். அதில் அவர் மிகவும் மோசமாக காயம் அடைந்தார்.


ரயில்வே நிலையத்திற்கு ஆளுநரின் மகனை அழைப்பதற்கு சொகுசு காரை அனுப்பாததால் எனது கணவரை ஆளுநர் மகன் தாக்கியுள்ளார். அந்த சமயத்தில், பல வாகனங்கள் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு அரசு பணிக்காக வெளியில் அனுப்பப்பட்டு இருந்தன. அதன் காரணமாக, அப்போது ஆளுநர் மாளிகையில் இருந்த மாருதி சுசிகி காரை எனது கணவர் அனுப்பினார். வி.ஐ.பி. போல தான் நடத்தப்படவில்லை என்று கூறி எனது கணவரை ஆளுநர் மகன் தாக்கியுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரை எனது கணவர் சந்தித்தார். ஆனால், அவர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், நாங்கள் பூரி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது? என்பது அனைவருக்கும் தெரியும். “


இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் பெரிது அடைந்தவுடன் பைகுந்தாவையும், அவரது மனைவியையும் சந்தித்த ஆளுநர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.