ஓடிசா மாநிலத்தில் புதிதாக அமையவிருக்கும் எஃகு ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையைக் கையாண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



 


 


ஒடிசா மாநிலம் ஜகத்சிம்மபூரில், ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் எஃகு தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க  ஜேஎஸ்டபிள்யூ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு ரூ.53,700 கோடி முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும்  ஜேஎஸ்டபிள்யூ எஃகு நிறுவனத்தின் தலைவர் சாஜன் ஜிந்தால் முன்னிலையில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  






ஓடிசா மாவட்டத்தில் அமைய உள்ள ஜேஎஸ்டபிள்யூ எஃகு ஆலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து தின்கியா கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களுக்கு லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள் போன்ற தொழில்கள் நசுங்கி விடும் என்றும் எச்சரிகின்றனர். 


சனாயாக ரீதியில், போராட்டம் நடத்திவரும் கிராம மக்கள் மீது ஒடிசா அரசு கடுமையான அடக்குமுறையை செலுத்திவருகிறது. கடந்தாண்டு, டிசம்பர் மாதம் போராட்த்தை அடக்கும் விதமாக உள்ளூர்மட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி அரசின் தொடர் அடக்குமுறையை எதிர்த்து, 500க்கும் மேற்பட்ட தின்கியா கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அப்போது, கிராம மக்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், பொதுமக்கள் மீது கடுமையான தடியடியை நடத்தியுள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் அடிப்படை மாண்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ள காவல்துறையின் நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகின்றனர்.  ஒவ்வொரு மனிதனும் தன் உரிமைகளை பெறுவதற்கு முழு உரிமையுண்டு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில், தடியடி போன்ற வன்முறை செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.      


போஸ்கோ திட்டம்:       


முன்னதாக, கடந்த  2005ம் ஆண்டு, இதேதிட்டத்துக்கு தென்கொரியாவைச் சேர்ந்த இரும்பு  உற்பத்தி  நிறுவனமான போஸ்கோ நிறுவனத்துக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீடு கொண்டதாக பார்க்கப்பட்டது. 


மேலும், முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்காக, 4004 பரப்பளவு கொண்ட நிலத்தை  கையகப்படுத்த ஓடிசா அரசு ஒப்புதல் அளித்தது. அரசின் இந்த நடவடிக்கையால், எட்டு கிராமங்களில் உள்ள  சிறு விவசாயிகளும், மீனவர்களும் தங்கள்  வாழ்வாதரங்களை  இழக்க வேண்டிய சூழல் உருவானது. இதன், காரணமாக தொடர் போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்தனர்.


குறிப்பாக, தின்கியா கிராமத்து மக்கள் இந்த போராட்டத்தின் மையப் புள்ளியாக விளங்கினர். இந்நிலையில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக கூறி முன்மொழியப்பட்ட திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தேசிய பசுமை தீர்பாணையம் தெரிவித்தது. இதனையடுத்து, போஸ்கோ திட்டத்தை முன்னெடுத்து செல்லவும் தயக்கம் காட்டியது. தற்போது, இந்த திட்டத்தை  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு வழங்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.