உலகம் இயங்குகிறது என்றாலே அதற்கு காரணம் மனிதநேயமும் அன்பும்தான். ஆனால், அவ்வப்போது மனிதநேயமற்ற சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அதையும் மீறி, மனிதநேயத்தை நிலைநாட்டும் சம்பவங்கள் நடக்கின்றன.


அப்படிப்பட்ட சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற 33 வயது பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நபருக்கு ஆந்திர மாநில போலீசார் உதவி செய்துள்ளனர்.  ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால், மற்றொரு வாகனத்தை ஏற்பாடு செய்ய அவரிடம் பணம் இல்லை. எனவே, அவர் சடலத்துடன் நெடுஞ்சாலையில் நடக்கத் தொடங்கினார்.


ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் அவரைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அவருக்கு உதவ அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். ஒடிசா மாநிலம் கோராபுட்டைச் சேர்ந்த எடே சாமுலு என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி ஈடே குருவை விசாகப்பட்டினம் சங்கிவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.


அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரை கிராமத்திற்கே அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.


மருத்துவமனையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்ப ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்தார், ஆனால், அவரது மனைவி விஜயநகரம் அருகே நடுவழியில் இறந்துவிட்டார்.


ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரிடம் 2,000 ரூபாய் பணம் கொடுத்த பிறகு, மீதம் பணம் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. இதனால், மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி பல கி.மீ., நடந்துள்ளார்.


உள்ளூர்வாசிகள் அந்த நபரைக் கண்டதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் டிவி திருப்பதி ராவ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கிரண் குமார் நாயுடு ஆகியோர் அவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய 10,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.


சமீபத்தில் கூட, மாற்றுத்திறனாளி ஒருவரை ஒரு ஆணும், பெண்ணும் கட்டையால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.


அந்த வீடியோவின் படி மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய 3 சக்கர பைக்கில் அமர்ந்துள்ளார். அவரை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை மிரட்டுகின்றனர். 


அது மட்டுமின்றி கையில் உள்ள கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்குகின்றனர். இந்த வீடியோவே சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


இது காட்டுமிராண்டுத்தனம் என்றும், மனிதநேயம் எங்கே என்றும் பலரும் விமர்சித்து கருத்துகளை பதிவு செய்தனர்.