மத்தியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் பிரதமரின் ஜாக்கெட் உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களை உபயோகித்து அந்த ஜாக்கெட்கள் தயாரிக்கப்பட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். அந்த ஜாக்கெட்டை அணிந்ததன் மூலம், அவர் நீடிக்கும்தன்மை குறித்த தனது முக்கிய உரையை கூட்டத்தில் நிகழ்த்தினார். 


நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி நீல நிறத்திலான பந்த் காலா ஜாக்கெட்டை அணிந்து அவைக்கு வந்திருந்தார். 


இந்த வார தொடக்கத்தில், பிரதமர் மோடி இந்தியன் ஆயிலின் "அன்பாட்டில்ட்" என்கிற செயல்பாட்டைத் தொடங்கிவைத்தார். மேலும் பெங்களூருவில் நடைபெறும் 2023 இந்தியா எனர்ஜி வீக் 2023 நிகழ்வில் இடம்பெற இருக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆடைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.


'குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி'  (Reduce, Reuse, Recycle) என்பது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை முறையின் தவிர்க்கக்கூடாத ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டார். பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றை நோக்கி நாடு நகர்வதன் அடுத்தபடியாக இது கருதப்படும் என அவர் குறிப்பிட்டார். 


2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. 


தாமரை மலரும்:


பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசினார். அவர் பேசியதாவது, “எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் தேச நலனை பாதிக்கும். நீங்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் அதில் தாமரை மலர்ந்தே தீரும்.


நாடாளுமன்றத்தில் பலருடைய நடவடிக்கைகள், உரைகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளன. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் தங்களது குறைகளை உணரவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் முன்னேற்றப்பாதை குண்டும், குழியுமாக இருந்தது.


மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தன. நாட்டின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 11  கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய ஆட்சிக்காலத்தில் 3 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. 


சிலிண்டர் இணைப்புகள்:


கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1.7 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் சமையல் எரிவாயு இணைப்புகள் 14 கோடியில் இருந்து 32 கோடியாக உயர்ந்துள்ளது.


விரக்தியடைந்த பலர் முழக்கங்களை எழுப்புகிறார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு திட்டங்களின் பலன் சாதி, மத பாகுபடின்றி அனைவருக்கும் கிடைக்கின்றன. அனைவருக்கும் அரசு திட்டங்கள் கிடைப்பதன் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்படுகிறது. அனைத்து பயனாளிகளையும் திட்டங்கள் சென்றடைவதால் உண்மையான மதச்சார்பின்மை நிலைநாட்டப்படுகிறது. நீண்ட நாட்களாக நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பதே எங்கள் அரசின் நோக்கம். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகளுக்கான தீர்வுகளை காங்கிரஸ் ஆட்சி வழங்கவில்லை.”


இவ்வாறு அவர் பேசினார்