ஒடிசா மாநிலத்தில் உணவு ருசியாக இல்லை என்று தெரிவித்த வாடிக்கையாளர் மீது கடை உரிமையாளர் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிசா மாநிலத்தை அடுத்த கட்டாக்கில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் உள்ள பாலிச்சந்திரபூர் கிராமத்தில் வசிப்பவர் 48 வயதான பிரசன்ஜித் பரிதா. இவர் கடந்த சனிக்கிழமை உள்ளூர் சந்தையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்துவிட்டு நீண்ட நேரமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. 


இந்தநிலையில், நீண்ட நேரத்திற்கு தான் ஆர்டர் செய்த உணவு வந்ததும் ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார். அப்போது தான் தினந்தோறும் சாப்பிடும் உணவு என்றாலும், இன்று ஏதோ உணவில் ருசி குறைவாக இருந்துள்ளதாக அவர் உணர்ந்துள்ளார். 


இதுகுறித்து கடை உரிமையாளரிடம், பரிதா சென்று உணவு ருசியாக இல்லை என்று தெரிவித்து முறையிட்டுள்ளார். தொடர்ந்து வேறு வழியின்றி சாப்பிட்ட பரிதா, சாப்பிட்டு முடித்ததும் பில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, சாப்பிட்ட உணவிற்கு அதிகமாக பில் போடப்பட்டதாக உணர்ந்து இதுகுறித்தும் கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையாக தொடங்கியது வாக்குவாதமாக மாறியது. 


வாக்குவாதமும் முற்றி நீண்ட நேரமாக பொறுமையாக இருந்த கடை உரிமையாளர் பிரவாகர் கொதிக்கும் எண்ணெயை எடுத்து பரிதா மீது ஊற்றியுள்ளார். இதனால் பரிதாவின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. 


இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மற்ற சில வாடிக்கையாளர்கள் பரிதாவை மீட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பரிதாவின் முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 


பரிதா பலத்த காயம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த கடை உரிமையாளர் பிரவாகரை பாலிச்சந்திரபூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமாகாந்த முதுலி கைது செய்து விசாரித்து வருகிறார்.