இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்து வரும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்த்து, பல மாநில அரசுகள், அதை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளது. சத்துணவு திட்டம் தொடங்கி மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வரை பல திட்டங்களை சொல்லி கொண்டே போகலாம்.


அந்த வகையில், உடல் உறுப்பு தானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ஒடிசா அரசு, தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.


உடல் உறுப்பு தானம்: 


உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. ஒருவரின் உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக பாராட்டை பெற்று வருகிறது. சமீபத்தில், சிறந்த உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான விருதை தமிழ்நாடு பெற்றது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, அந்த விருதை வழங்கியிருந்தது.


இப்படிப்பட்ட சூழலில், உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 


தமிழ்நாட்டை பின்பற்றும் ஒடிசா:


இந்த நிலையில், தமிழ்நாட்டை போன்றே, இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உறுப்பு தானம் தொடர்பாக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.


 






மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 1,706 பேரிடமிருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது. 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இந்த திட்டத்தின் முலம் பெற்று மக்கள் பயன் அடைந்துள்ளனர். உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.