சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். ஒருவர், இன்னொருவரை காதலிக்க காரணம் எல்லாம் தேவை இல்லை. எந்த வித காரணமும் இல்லாமல் ஹார்மோன்கள் விளையாடும் விளையாட்டே காதல். உலகை விழுங்கும் ஆபத்தான மிருகம் வெறுப்பு என்றால் அதை கட்டி ஆளும் ஆயுதம்தான் காதல்.


இப்படிப்பட்ட மகத்தான உணர்வை போற்றும் காதலர் தினம் வழக்கம்போல் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ரோஸ், சாக்லெட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேரில் பார்த்து கொள்ள முடியாத காதலர்களுக்கு தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


காதலியை பார்க்க முடியாத தவித்த காதலன்:


அந்த வகையில், நேரில் பார்க்க முடியாத தன் காதலிக்கு பூக்களை வாங்க இளைஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. பொருள்களை வாங்கி ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் பிளிங்கிட் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார் இளைஞர்.


காதலர் தினத்தன்று தனது காதலியின் பெற்றோர் அவரை வெளியே செல்ல விடவில்லை தடுத்து வைத்திருப்பதாக கூறி, தன்னுடைய காதலியிடம் அழைத்து செல்லுமாறு பயனர் ஒருவர் பிளிங்கிட் டெலிவரி நிர்வாகியிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் பிளிங்கிட் தலைமை செயல் அதிகாரி (CEO) அல்பிந்தர் திந்த்சா.


இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "இந்தியா, ஆரம்நிலையில் இருப்பவர்களுக்கு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என பதிவிட்டுள்ளஆர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. எக்ஸ் தளத்தில் இந்த பதிவு 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.


காதலர் தினத்தன்று செம்ம ரகளை:


மேலும், அந்த காதலரின் ஆசையை பூர்த்தி செய்யும்படி எக்ஸ் பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு பயனர், இதை விளம்பர உத்தி என விமர்சனம் செய்துள்ளனர்.


அந்த வகையில் கருத்து பதிவிட்ட பயனர் ஒருவர், "கட்டணத்தை வசூலித்துவிட்டு அவரை டெலிவரி செய்யவும். உங்களுக்கான புதிய வருவாய் வந்திருக்கிறது. அனைவருக்கும் மகிழ்ச்சி தானே" என குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு பயனர், "இது விளம்பர உத்தி. சகோ, கஸ்டமர் சப்போர்ட்டில் இந்த அளவுக்கு வேகமாக பதில் அளித்ததை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு விளம்பர உத்தியை வகுத்து தரும் நபருக்கு போதுமான அனுபவம் கிடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என கலாய்த்துள்ளார்.