ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ வைரலானது. அதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கை நடுங்குவதை பார்க்க முடிந்தது. அதில், நவீன் பட்நாயக்கின் மைக்கை பிடித்து கொண்டிருந்த வி.கே.பாண்டியன், திடீரென பட்நாயக்கின் கையைப் பிடித்து கை நடுங்குவதை மறைத்தார்.
இந்த வீடியோ குறித்து, அசாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, விமர்சனங்களை வைத்தார். ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்ததாவது, “ நவீன் பட்நாயக்கின் வீடியோ ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோவில், நவீன் பாபுவின் கை அசைவுகளைக் கூட வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் ஒடிசாவின் எதிர்காலம் குறித்து தற்போது கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டின் அளவை நினைத்துப் பார்க்கவே நான் நடுங்குகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, ஒடிசா மக்கள் 4.5 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். குடும்பத்தில் ஒருவனாக, உங்களுக்கு சேவை செய்கிறேன். மகிழ்ச்சியான மற்றும் துக்கமான தருணங்களிலும் உங்கள் பக்கம் இருந்துள்ளேன். இது, எப்போது தொடரும். மாநில அரசின் திட்டங்களால், மகளிருக்கான திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
ஒடிசா இளைஞர்கள், தன்னம்பிக்கையோடு முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இவர்களின் சக்தியால், நம்பர் 1 மாநிலமாக ஒடிசா மாறும். சில அரசியல் தலைவர்கள், என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது கவலை அளிக்கிறது. நான், யாரையும், கவலைப் படும்படியான கருத்துக்களை தெரிவித்ததில்லை.
இளைஞர்களே , தாய்மார்களே, இவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும், வரும் ஜூன் 1 ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இச்சூழலில், நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து, விசாரணை கமிசன் அமைக்கப்படும் என பிரதமர் கூறிய நிலையில், பட்நாயக் தெரிவித்ததாவது, அவருக்கு என் மீது அக்கறை இருந்தால், நல்ல நண்பராக என்னை தொடர்பு கொண்டு முதலில் பேசியிருக்க வேண்டும். பாஜகவினர், எனது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். நான் நலமுடன் உள்ளேன். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறேன். எனது உடல்நலன் குறித்து, வதந்தி பரப்புவோர் மீது விசாரிக்க விசாரணை கமிசன் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.