Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய ஒடிசா மக்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க நடு இரவிலும் வந்த ஒடிசா மக்களுக்கு மிகவும் நன்றி. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்த தானம் அளித்த ஒடிசா மாநில இளைஞர்களுக்கும் மிகவும் நன்றி என அந்த வீடியோவில் நவீன் படநாயக் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதாவது ஜூன் 2ஆம் தேதி சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அதே பாதையில் வந்த சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான ரயில் மீது மோதியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
"யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை"
உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒடிசா வந்தடைந்த அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விபத்திற்கான மூல காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விசாரணையை எந்தவித இடையூறும் இல்லாமல் தனியாக விசாரணை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.