ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், காயமடைந்த தனது தந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக 35 கி.மீ தூரம் மிதிவண்டி ரிக்ஷாவை ஓட்டிச் சென்ற சம்பவம் நெஞ்சை நெகிழ செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 23ம் தேதி நடந்துள்ளது.
என்ன நடந்தது..?
கடந்த அக்டோபர் 22ம் தேதி நடந்த சண்டை ஒன்றில் 14 வயது சிறுமி சுஜாதாவின் தந்தையான ஷம்புநாத் என்பவருக்கு பலத்த காயம் ஏற்படுத்துள்ளது. இதனால், அடுத்த நாள் ஷம்புநாத்தின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுஜாதா, முதலில் தனது தந்தையை அவர்களது கிராமத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தாம்நகர் மருத்துவமனைக்கு மிதிவண்டி ரிக்ஷாவை ஓட்டிச்சென்று அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள் அவரது தந்தையை பத்ரக் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது, தனது கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத சுஜாதா, தனது தந்தைக்கு மருத்துவ சிகிச்சையை எப்படியாவது கொடுத்து விடவேண்டும் என்று யோசித்துள்ளார். அப்போது, சுஜாதாவுக்கு மிதிவண்டி ரிக்ஷாவே கண்ணில் பட, சிரமம் எதையும் பார்க்காது மேலும் 35 கி.மீ தூரம் மிதித்து கொண்டு சென்று அனுமதித்துள்ளார். தொடர்ந்து, பத்ரக் மருத்துவமனை டாக்டர்கள் அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து திரும்பி கொண்டு வருமாறு சுஜாதாவிடம் கூறியுள்ளனர். சுஜாதாவிடம் தனியார் வாகனத்தை பிடிக்க பணமோ, ஆம்புலன்ஸை அழைக்க மொபைல் போனோ இல்லை. தொடர்ந்து, தனது தந்தையின் உடல்நிலையை சீராக்க மீண்டும் மிதிவண்டி ரிக்ஷாவை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிகிச்சைக்கு உதவி:
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக் மற்றும் தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் உடனடியாக சிறுமியை அணுகி தேவையான உதவிகளை வழங்கினர். பத்ரக்கின் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி (சிடிஎம்ஓ) சந்தனு பத்ரா, அக்டோபர் 23 அன்று சம்புநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை முடியும் வரை அங்கேயே இருப்பார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்ல தங்களிடம் ஆம்புலன்ஸ் சேவை இல்லை என தெரிவித்தார். தற்போது, சிறுமியின் இந்த செயலை கேள்வி பட்ட அனைவரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றன.