தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் ஜூப்லி ஹில்ஸ் தொகுதிக்கான வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்:
அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதியும் மற்றும் தெலங்கானாவில் தெலுங்கானாவில் நவம்பர் மாதம் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெலங்கானாவில் களமிறங்கும் அசாரூதின்:
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் தெலங்கானா மட்டுமே. இந்த மாநில சட்டமன்றம் மொத்த 119 தொகுதிகளை கொண்டுள்ளது. பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளார். தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சி தரப்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி தரப்பில் 2 ஆம் கட்ட வேடபாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 45 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஜூப்லி ஹில்ஸ் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள்:
அதேபோல், லால் பகதூர் நகர் தொகுதியில் முன்னாள் எம்பி மது கவுட் யாக்ஷி, ஹுசனாபாத் தொகுதியில் பொன்னம் பிரபாகர், அடிலாபாத் தொகுதியில் கண்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கம்மத்தில் தும்லா நாகேஷ்வர் ராவ், முனுகோட்டில் கே ராஜ் கோபால் ரெட்டி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இதன் மூலம், நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இதுவரை மொத்தம் 100 வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ராஜ் கோபால் ரெட்டி, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வாழ்த்துகள்:
நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை களமிறக்கியுள்ளது. இவர் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய அவர், “ வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து காங்கிரஸ் தலைமை டெல்லியில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் முக்கியமான கூட்டத்தில் ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.