தேசியவாத காங்கிரஸ் எம்பியும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலேவை, ”அரசியலில் ஈடுபடுவதை விட்டு வீட்டுக்குச் சென்று சமைக்குமாறு மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிசி இட ஒதுக்கீடு
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தான் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற என்ன செய்தார் என்பதை தன்னிடம் அவர் சொல்லவில்லை என்றும் சுப்ரியா சூலே முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
பாஜக Vs தேசியவாத காங்கிரஸ்
தொடர்ந்து நேற்று (மே.25) இதர பிற்படுத்தப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மகாராஷ்டிரா மாநில பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், சந்திரகாந்த் பாட்டீல் சுப்ரியா சூலேவை கடுமையாகத் தாக்கி பேசினார்.
”நீங்கள் அரசியலில் ஏன் இருக்கிறீர்கள்? அதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று சமையுங்கள். டெல்லிக்கோ, கல்லறைக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் எங்களுக்கு ஓபிசி ஒதுக்கீடு பெற்று கொடுங்கள்.
மக்களவை உறுப்பினராக இருந்தும் ஒரு முதலமைச்சரை சந்தித்து பேசுவது பற்றி எப்படி உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறது?” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
பதிலடி தந்த மகளிர் அணித் தலைவி
இந்நிலையில், சந்திரகாந்த் பாட்டீலின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி வித்யா சவான், ”நீங்கள் மனு நூலில் நம்பிக்கை கொண்டவர்கள் எனத் தெரியும், ஆனால் இனியும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண் எம்எல்ஏ ஒருவருக்கு அவரது தொகுதியில் வாய்ப்பு தர மறுத்தவர் தான் சந்திரகாந்த் பாட்டீல் என்றும், அவர் வேண்டுமானால் சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும், அதன் மூலம் அவரது மனைவிக்கு அவர் வீட்டில் உதவலாம் என்றும் பதிலடி தந்துள்ளார்.
’பாஜகவினர் பெண் வெறுப்பாளர்கள்...’
இந்நிலையில் இது குறித்து முன்னதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சுப்ரியா சூலேவின் கணவர் சதானந்த் சூலே, ”இவர்கள் என்றுமே பெண் வெறுப்பாளர்களாகவும், தங்களால் முடிந்தபோதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தி வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.
என் மனைவி ஒரு குடும்பத் தலைவியாகவும், தாயாகவும், வெற்றிகரமான அரசியல்வாதியாகவும், கடும் உழைப்பாளியாகவும், திறமைவாய்ந்த பெண்ணாகவும் இந்தியாவில் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். இந்த சம்பவம் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்