மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணாசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மிகப் பெரிய தேச விரோத திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதில் இந்த நாட்டில் உள்ள சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்த்து கொடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.




அதில் விமான நிலையங்கள்,  ரயில்வே துறை சொத்துக்கள், தொலைபேசி துறை, மின் துறை, மின் வினியோக சொத்துக்கள், நிலக்கரி சுரங்கங்கள் போன்றவை பொதுத்துறையில் நிர்வகிக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் இந்த நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து அதன் மூலம் நாட்டை திவாலாக்கும் ஒரு முடிவை அறிவித்துள்ளார். நாட்டின் வருமானத்தை பெருக்க பல வழிகள் உள்ளன. அவற்றை விட்டு விட்டு அரசின் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்த்து நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. இதை எதிர்த்து நாம் போராட  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் போது,   சாதி வாரி  கணக் கெடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மோடி அரசு கூறியுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலம் நாட்டில், இடஒதுக்கீடு கொடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மோடி அரசு உடனே அறிவிக்க வேண்டும்.



 


புதுச்சேரிக்கு மாநில அரசு வைத்த கோரிக்கை ஒன்றைக்கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி வைத்த கோரிக்கையான மாநில அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. 41 சதவீதம் மானியம் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று எழுதிய கடிதம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.


புதுவை அரசு ரூ.10,100 கோடிக்கு திட்ட வரையறை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த தொகையில் ரூ.200 கோடி குறைத்து, ரூ.9,900 கோடிக்கு மட்டும் ஒப்புதல் கொடுத்ததாக அதிகாரமற்ற தகவல்கள் வருகின்றன. இதில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை எவ்வாறு புறக்கணித்ததோ, அதேபோல் ரங்கசாமி ஆட்சியையும் மத்திய மோடி அரசு புறக்கணிப்பது தெளிவாகிறது.


 




 


என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்த பிறகு கட்-அவுட் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. முதலமைச்சரின் பிறந்த நாளின் போது பேனர் கலாசாரம் மிகப்பெரிய அளவில் இருந்து தொடர் கதையாகியுள்ளது. இதை ஒழித்தால் மட்டும் தான் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆகவே புதுச்சேரியில் பேனர் கலாசாரத்தை முழுமையாக தடுக்க வேண்டும். பேனர் தடை சட்டத்தை முதலமைச்சர் நடைமுறைப் படுத்த வேண்டும் என கூறியுள்ளார்