மாநிலத்திற்கேற்றார்போல் அரசு அலுவலகங்களுக்கு வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இருப்பினும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, எல்லா சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் லீவு என்கிற நடைமுறை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கேரள அரசு இந்த யோசனையை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகைக்கு அம்மாநில ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரு தரப்பிலும் இதற்கு ஆதரவு உள்ளதால், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இந்த விஷயம் கடந்த 2014ம் ஆண்டு முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போதைய முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டி இந்த விஷயம் குறித்த அறிவிப்பை வெளியிட இருந்தார். ஆனால் அமைச்சரவைக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலன் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம் நீர், மின்சாரம் மற்றும் வாகனப் பயன்பாட்டில் செலவினைக் குறைப்பதும் இதன் நோக்கமாக கருதப்பட்டது.
ஆனால் பொது சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பிரனாயி விஜயன் தலைமையிலான அரசு இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருகிறது. பொது நிர்வாகத் துறை, இது தொடர்பாக சேவை நிறுவனப் பிரதிநிதிகளுடன் செப்டம்பர் 11 அன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான சேவை நிறுவனங்கள் சனிக்கிழமையை வாராந்திர விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும் சில மாற்றங்களுடன் வார விடுமுறை அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
அதாவது பயோமெட்ரிக் வருகை பதிவை முழுமையாக செயல்படுத்தப்பட்ட பின்னர்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இந்த விடுமுறைகளை ஈடுகட்ட சாதாரண விடுப்பு நாட்களின் எண்ணிக்கையை 20ல் இருந்து 15 ஆகக் குறைப்பது, சிறப்பு விடுப்பை 33ல் இருந்து 30 நாட்களாகக் குறைத்தல், மதிய உணவு இடைவேளையை 45 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாகக் குறைத்தல், காலை அலுவலக நேரத்தை 45 நிமிடங்கள் முன்னதாகத் தொடங்குதல் மற்றும் மாலை அலுவலக நேரத்தை 15 நிமிடங்கள் நீட்டித்தல் போன்ற மாற்றங்களுக்கு பிறகு இது முழுமையாக அமல்படுத்தப்படலாம்.எல்லாம் ஓகேதான். ஆனால், அரசு ஊழியர்கள் கொஞ்சம் வேகமாக வேலை செய்தால் போதும். அல்லது தேவையான அளவுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும், அதேபோல தனியார் ஊழியர்களுக்கும் இதேபோல விடுமுறை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.