சத்குருவின் ஈஷா யோகா மையம் பல்வேறு விமர்சனங்களை தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறது. இதுகுறித்து அண்மையில் அவரிடம் கேட்கப்பட்ட சில சுவாரசியமான கேள்விகளுக்கு அதே சுவாரசியத்துடன் பதிலளித்துள்ளார் சத்குரு. உங்களது கட்டமைப்பு கார்ப்பரேட்டாக மாறிவிடும் என்கிற அபாயம் இருக்கிறதா? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு... 


“என்னுடன் இருப்பவர்களை வைத்துக்கொண்டு நான் கார்ப்பரேட் ஆகக் கனவு கூடக் காணமுடியாது.என்னுடன் நிறைய பேர் இருக்கிறார்கள். எஞ்சினியரிங் படித்தவர்கள் இங்கே எங்கள் மையத்தில் குக்கிங்கில் இருப்பார்கள். குக்கிங் முடித்தவர்கள் பொறியியல் வேலைகளைப் பார்ப்பார்கள். டூத்பேஸ்ட் நிறுவனம் தொடங்குவதில் கவனம் செலுத்திவிட்டால், யோகா பயிற்சி கொடுக்கத் தொடங்கிவிட்டால் எங்களுடைய நோக்கத்தைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும். யோகா கற்றுக்கொண்டால் உடல்நலன் பாதுகாக்கலாம், நோயை குணப்படுத்தலாம் என்கிறார்கள். தவறில்லைதான். பாராட்ட வேண்டிய விஷயம்.ஆனால் அப்படித் தொடங்கிவிட்டால் நாங்கள் மருத்துவமனையாக மாறிவிடுவோம்.மருத்துவமனையாக மாறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் எங்கள் வேலை டூத்பேஸ்ட் விற்பனையோ யோகாவோ இல்லை, மனிதர்கள் மனதளவில் பரிணாம வளர்ச்சி அடையச் செய்வதே எங்கள் நோக்கம்” என்றார்.


முன்னதாக, ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பெரியளவிலான மத மோதல்கள் ஏற்படவில்லை எனவும், அவை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் ஊதி பெருக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். 


ANI செய்தி நிறுவனத்துடன் நேர்காணல் ஒன்றில் பேசிய சத்குரு, தான் கல்லூரியின் பயின்ற போது நாடு முழுவதும் பெரியளவிலான மத மோதல்கள் நடைபெற்றதாகவும், அதோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிதாக மத மோதல்கள் நிகழவில்லை எனவும் கூறியுள்ளார். 


`மண் காப்போம்’ என்ற பிரசாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 27 நாடுகளில் 30 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் இந்தியா வந்தடைந்தார். மேலும், `உலக சுற்றுச்சூழல் தினத்தை’ முன்னிட்டு, கடந்த ஜூன் 5 அன்று பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்திருந்தது ஈஷா மையம். இதிலும் சத்குரு கலந்துகொண்டார்.


நாட்டில் அதிகரிக்கும் மதப் பிரச்னைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, `நாம் சில விவகாரங்களைக் கூடுதலாக பெரிதுபடுத்துகிறோம் என நினைக்கிறேன். சில விவகாரங்கள் விவாதங்களாக மாறியிருக்கின்றன. அதனால் தொலைக்காட்சிகளில் அதீதமாக வெப்பம் நிலவுகிறது. அதே நிலைமையை நீங்கள் தெருவில் பார்க்க முடியாது. டெல்லியிலோ, நாட்டின் எந்த கிராமத்திலோ நீங்கள் நடந்து சென்றால், இதுபோன்ற வன்முறை எதுவும் இல்லையென்பது உங்களுக்குப் புரியும்’ எனக் கூறியுள்ளார். 


வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள சத்குரு, இந்த விவகாரத்தில் அனைத்தும் பெரிதுபடுத்தப்படுவதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் இதனால் கொதிநிலை நிலவுவதாகவும் கூறியுள்ளார்.