உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் 2.30 மணிக்கு டெட்டனேட்டருடன் இணைத்து இரட்டை கட்டடம் தகர்க்கப்பட்டது.   விதிமீறி 32 மாடியுடன் 328அடி உயரத்தில் அபெக்ஸ் மற்றும் 31 மாடியுடன் 318 அடி உயரத்தில் சியான் கட்டடம் கட்டப்பட்டதால் இன்று இடிக்கப்பட்டது.  இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்க சுமார் 3, 700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டது. கட்டடத்தின் தூண்களில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டநிலையில் எடிஃபைஸ் பொறியியல் நிறுவனம் கட்டடத்தை இடித்துள்ளது.






கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லாரி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கட்டட இடிப்பின்போது சுமார் 3.கி.மீ தொலைவிற்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை நிறுத்திவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 5000 குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். கட்டடம் இடிக்கப்பட்டதும் அதிக தூசி கிளம்பும் என்பதால் விமான போக்குவரத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.





கட்டட இடிப்பு பணிகளுக்காக ரூ. 20 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் 9 நொடிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது.


கட்டடத்தின் வழக்கு விவரம் : 


உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள்  இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.


இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்,  40 மாடிகளை உடைய, 'எமரால்டு கோர்ட்' என்ற  இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது.  இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது. 


அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூப்பர்டெக் நிறுவனம். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட  இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, 'எடிபைஸ் இன்ஜினியரிங்' எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.  இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன்  காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. 


இதனை அடுத்து ஹரியானா மாநிலாத்தில் இருந்து 3,500 கிலோ வெடி மருந்து கொண்டுவரப்பட்டு இரட்டை கோபுர கட்டிடத்தில் 9,400 துளைகளில் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்து இடிக்க திட்டமிடப்பட்டு, வெடி மருந்துகளை 15 நாட்களுக்குள் கட்டிடத்தில் நிரப்பி விட்டனர்.