Tata Trusts Chairman: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரர் ஆவார். இந்தியாவின் மிக முக்கியமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழுவினரால் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது நிறுவனத்திற்கான தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. அறக்கட்டளையின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கி தற்போது நோயால் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


யார் இந்த நோயல் டாடா?


ரத்தன் டாடாவின் சகோதரர் ஆன நோயல் டாடாவின் வயது 67. இவர் முதன்முதலாக டாடா சர்வதேச நிறுவனத்தில் தான் தன் பணியை தொடங்கினார். 1999-ம் ஆண்டில் டிரண்ட் (Trent) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். ஆடை விற்பனை கடைகளில் இப்போது பெரிய அளவில் இருக்கும் வெஸ்ட்சைடை லாபகரமானதாக மாற்றியதில், நோயல் டாடாவிற்கு முக்கிய பங்கு உண்டு. 2003-ம் ஆண்டு இவர் டைட்டன் மற்றும் வோல்டாஸின் இயக்குனர் ஆனார். 2011-ம் ஆண்டு 'தனக்கு பிறகு சைரஸ் மிஸ்ரா' டாடா குழுமத்தின் தலைவராக செயல்படுவார் என ரத்தன் டாடா அறிவித்தார். ஆனால், 2016-ம் ஆண்டில் சைரஸ் மிஸ்ரா டாடா சன்ஸின் தலைவர் பதவியில்ருந்து நீக்கப்பட்டு, மீண்டும் ரத்தன் டாடாவே தலைவரானார்.


2017-ம் ஆண்டு நோயல் தான் டாடா சன்ஸின் அடுத்த தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு போதுமான அனுபவம் இல்லாததால் தமிழ்நாட்டச் சேர்ந்த சந்திரசேகரன் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், டாடா அறக்கட்டளையில் நோயலும் ஒரு அறங்காவலராக இருந்தார். டாடா குழுமத்தில் இவருக்கு நல்ல பெயர் உண்டு. மேலும் டாடா குழும அறக்கட்டளைகளில் இவரது முக்கிய பங்களிப்புகளால் நிச்சயம் இவர் தான் அடுத்த தலைவராக  தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படி, டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவராக நோயல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாடா அறக்கட்டளையின் தலைவராக, டாடா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேநேரம், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சந்திரசேகர் தொடர உள்ளார். 


டாடா அறக்கட்டளை:


டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டாடா கன்சல்டன்சி சர்விஸ் என பல தொழில்களை செய்து வந்தாலும், டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றதில்லை. காரணம் டாடா குழுமத்தின் பெரும்பாலான பங்குகள், டாடா அறக்கட்டளையின் கீழ் உள்ளன.  பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்ட இந்த அறக்கட்டளை, பல சமூக சேவைகளை செய்து வருகிறது.