நேற்று (வியாழன்) உச்ச நீதிமன்றம், அதன் உத்தரவுகளை மீறி, வெறுப்பூட்டும் பேச்சுகளை உமிழ்வதற்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் நடக்கும் எல்லா பேரணிக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றால் முடியாத காரியம், மீண்டும் மீண்டும் இங்கு வராதீர்கள் என்று கூறியது. 


பேரணியை தடை செய்ய அவசர மனு


பிப்ரவரி 5 ஆம் தேதி மும்பையில் இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா நடத்தவிருந்த ஒரு நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரிய மனு அவசர விசாரணைக்காகக் குறிப்பிடப்பட்டபோது, நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தின் வலுவான ஆய்வை மேற்கொண்டது. நிர்வாகத் தரப்பில் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க பெஞ்ச் ஒப்புக்கொண்டது. மும்பை பேரணியை நடத்துவதற்கு எதிராக இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டதை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. 



மீண்டும் மீண்டும் வராதீர்கள்


“இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு முறையும் பேரணி அறிவிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தைத் எதிர்பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். போதுமான தெளிவான உத்தரவுகளை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். நாடு முழுவதும் பேரணிகள் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். எல்லாவற்றையும் அவசரமாக எடுத்து விசாரிப்பது எப்படி சாத்தியமாகும்? ஒவ்வொருமுறையும் எங்களிடம் வழிகாட்டுதல்கள் கேட்டு எங்களை மீண்டும் மீண்டும் சங்கடப்படுத்துகிறீர்கள். நாங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு உத்தரவை பிறப்பிக்கும்படி உச்ச நீதிமன்றத்தைக் கேட்கக் கூடாது” என்று பெஞ்ச் குறிப்பிட்டது.


தொடர்புடைய செய்திகள்: HBD Simbu : எண்டே கிடையாது டா.. தமிழ் சினிமாவில் தனி நாற்காலி.. சிம்பு பிறந்தநாள் இன்று..


இஸ்லாமியர்களுக்கு எதிரான பேரணி


சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் 10,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் அந்த பேரணியில் முஸ்லிம் சமுதாய மக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புறக்கணிக்க அதில் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. வழக்கறிஞரின் தொடர்ச்சியான விடாமுயற்சியின் பேரில், விண்ணப்பத்தின் நகலை மகாராஷ்டிராவின் வழக்கறிஞரிடம் வழங்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. “ஒரு நகலை அரசுக்கு வழங்குங்கள், தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு உட்பட்டு நாளை பட்டியலிடுவோம். இந்த வழக்கு மட்டுமே, முழு தொகுதியும் அல்ல, ”என்று பெஞ்ச் கூறியது.



உடனடி நடவடிக்கை வேண்டும்


இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகள் வெறுப்புப் பேச்சுகளை கடுமையாகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், "இது மிகவும் தீவிரமான பிரச்சினை, இதன்மீது நடவடிக்கை எடுப்பதில் நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் தாமதம் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்",என்றும் எச்சரித்துள்ளது.