நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலவச மற்றும் மானிய விலை ரயில் சேவைக்காக  மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது.


அதேநேரம், தனது மானியக் கட்டணங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மறுத்து வருகிறது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.




இந்திய ரயில்வே, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மார்ச் 2020 இல் திரும்பப் பெற்றது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தொடர்ந்து மானியம் அளித்து வருகிறது.


கடந்த ஐந்தாண்டுகளில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்களுக்கு ரயில்வே பயணச் சலுகையாக 62 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவைச் செயலகம் அளித்த பதிலில், "முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயில் பயணம் மேற்கொண்டதற்கு ரயில்வே அமைச்சகத்திடமிருந்து பணம் செலுத்துதல் மற்றும் கணக்கு அலுவலகத்திற்கு கட்டண ரசிது வந்துள்ளது. இவை, எம்எஸ்ஏ கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 




கிடைக்கக்கூடிய பதிவுகளின்படி, எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் ரயில் செலவு கட்டண விவரங்கள் பின்வருமாறு: 2021-22ல் 3.99 கோடி ரூபாய், 2020-21ல் 2.47 கோடி ரூபாய், 2019-20ல் 16.4 கோடி ரூபாய், 19.75 கோடி ரூபாய், 2018-19ல், 2017-18ல் 19.34 கோடி ரூபாய்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கரோனா தொற்றுநோயின் முதல் இரண்டு அலைகள் முடிவுக்கு வந்த பிறகும் கூட, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் சலுகைகளை ரயில்வே இன்னும் திரும்பு கொண்டு வரவில்லை.


பிரதமர் நரேந்திர மோடியால் கரோனாவுக்கு மத்தியில் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட அதே மாதத்தில், 2020 மார்ச்சில், மூத்த குடிமக்களுக்கான மானியம் திரும்பப் பெறப்பட்டதில் இருந்து ரயில்வே 1,500 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியது.


முதியோருக்கான அரசு சலுகைகளின்படி, ரயில் டிக்கெட்டில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டது. சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அளித்த பதிலில், மார்ச் 20, 2020 முதல் மார்ச் 31, 2022 வரை 7.31 கோடி மூத்த குடிமக்கள் மானிய விலையில் ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.


இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 4.46 கோடி பேரும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 2.84 கோடி பேரும், திருநங்கைகள் 8,310 பேரும் அடங்குவர்.


ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசுகையில், மூத்து குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்கப்படாது என்றார்.