அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மருத்துவம் சாராத காரணங்களுக்காக குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்கள் கூட செலுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்பட மாட்டாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. 


பஞ்சாப்  அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை (IFHRMS - Integrated Financial and Human Resource) போர்டலில் அரசு ஊழியர்கள் தங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. இருந்தபோதும், தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஊழியர்கள் சிலர் முன்வரவில்லை. எனவே, இதுபோன்ற தீர்க்கமான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.  




தடுப்பூசி குறித்த வதந்திகளைக் களையவும், தடுப்பூசி குறித்த தயக்கத்தைப் போக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய/மாநில  அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கட்டாய தடுப்பூசி தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 


முன்னதாக, அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல் 15 நாட்கள் இடைவெளியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நாகாலாந்து அரசின் சுற்றறிக்கையை அசாம் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேபோன்று, மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளின் கட்டாய தடுப்பூசி திட்டத்தை அசாம் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 




 


எவ்வாறாயினும், M Karpagam v. Commissionarate for the welfare of Differently-Abled and anr வழக்கில், கொரோனா தொற்று நேரத்தில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு " தடுப்பூசியை வேண்டாம் என்று சொல்வது (Right To Refuse)" மக்களின் அடிப்படை உரிமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 


மஹாராஷ்ட்ரா, தில்லி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கோவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 213 பேரிடம் கண்டறியப்பட்டது. இவர்களில் 90 பேர் வீடு திரும்பியுள்ளனர்/ குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில்,  தற்போது 89 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


தடுப்பூசிகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள நாடுகளில் கூட இந்த பரவல் விகிதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு ஒமிக்ரானின்  தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் காரணமா? (அ) ஒமிக்ரான் பரவல் மற்றும் நோயின்  தீவிரத் தன்மை காரணமா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இரண்டு காரங்களும் ஒரு சேர இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் (ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம். எனவே, எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுகாப்பையும் தடுப்பூசி அளிக்கிறது.