பூனேயில் எஸ்.எஃப்.எல் என்கிற ஜிம் திறப்பதில் மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மற்றும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மற்றும் எஸ்.எஃப்.எல் நிறுவனத்தின் இயக்குனர் காஷிஃப் கான் ஆகியோர் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புனேயைச் சேர்ந்த 25 வயதான யஷ் நிதின் பராய் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அவரது புகாரின்படி மூவரும் சுமார் ஒன்றைரை கோடி பண மோசடி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 






அவரது புகாரில், ‘புனேயில் எங்கள் வீடு இருக்கும் இந்திரபிரஸ்த் என்னும் நிலத்தில் 2014ம் ஆண்டு பிட்னெஸ் நிறுவனம் திறப்பதாக காஷிஃப் கான் தரப்பினர் அணுகினார்கள். அப்போது நான் மைனர்.அதனால் என் அப்பா மூன்று தவணையாக இவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் பணம் கொடுத்தார்.ஆனால் இவர்கள் அங்கே பிட்னெஸ் மையத்தை உருவாக்கவில்லை. எங்கள் பணமும் திரும்பத் தரவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்தப் புகாருக்கு பதில் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, ‘இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை. முழுக்க முழுக்க காஷின் கான் என்பவர்தான் அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பு, எல்லோர் கவனமும் எங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு தொடரப்பட்டுள்ளது.நான் கடந்த 28 வருடங்களாகக் கடுமையாக உழைத்து வருகிறேன். சட்டத்தை மதிக்கும் நபராக எனது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, பார்ன் திரைப்படத் தயாரிப்பு வணிகத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ராஜ் குந்த்ரா மீது வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த மாதம் ஆபாசபடம் தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு நடிகை ஷெர்லின்சோப்ரா அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டில் 2019-ஆம் ஆண்டு ராஜ்குந்த்ரா என் மேனேஜரை தொடர்புகொண்டு ப்ராஜக்ட் குறித்து பேச வேண்டும் என்றார். பின்னர், தொழில்முறையிலான சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி எனது வீட்டிற்கு வந்து, என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.