காங்கிரஸ் கட்சியிலிருந்து சச்சின் பைலட் விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவிருந்த அசோக் கெலாட்டிற்கு சச்சின் பைலட் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தார். அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டி போர்க்கொடி உயர்த்தியதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். ஒருவேளை தலைவரானால் முதல்வர் பதவி தனக்கு வேண்டுமென சச்சின் நெருக்கடி கொடுக்க கெலாட் அதெல்லாம் முடியாது என்று முதல்வர் பதவியை தக்கவைத்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சச்சின் பைலட் தனது நெருக்கடியை ஆரம்பித்துள்ளார். 


நாளை உண்ணாவிரதம்:


முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் ஊழல் தொடர்பாக தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம்.தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன. ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள். எனது கோரிக்கையை வலியுறுத்தி, நான் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் 11-ந் தேதி (நாளை) ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறேன் என்று அவர் கூறினார். நாளை ஏப்ரல் 11 அசோக் கெலாட்டின் சைனி சமூகத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிர்பா பூலே பிறந்த நாள் ஆகும்.


சச்சின் பைலட் கோரிக்கைக்கு, அசோக் கெலாட் மந்திரிசபையில் உணவுத் துறை மந்திரி பிரதாப் சிங் காச்சாரியாவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


விலகல் இல்லை:


இந்த நிலையில் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகக் கூடும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று அவருக்கு நெருக்கமான வட்டம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னரே கட்சியிலிருந்து விலக வேண்டும் என்பதற்காகவே சச்சின் பைலட் இது போன்ற ஸ்டன்ட்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் சூழலில் அதனை அவரது ஆதரவாளர்கள் மறுக்கின்றனர்.


தலைவர்கள் கருத்து:


காங்கிரஸ் மேலிடமோ இப்போதுவரை அசோக் கெலாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றது. இதுவும் சச்சின் பைலட் விலகுவாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க, எங்கள் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்க பாஜக என்னவெல்லாம் செய்தது என்பதைப் பற்றிய விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதனால் ராஜஸ்தான் மக்கள் நிறையவே பலனடைந்துள்ளனர். அவை இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் தேர்தலுக்கு 8 மாதங்களே இருக்கும் சூழலில் கட்சியில் நிறைய அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சூசகமாக ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். 


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.


இந்நிலையில் ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.