ரயில் பயணிகளின் சிரமத்தைப்போக்கும் வகையில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்களை டோக்கன் முறையில் வழங்கும் முறையை தென் மத்திய ரயில்வே மண்டலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் இனி கால்கடுக்க நிற்க தேவையில்லை.
வெளியூர் மற்றும் பிற மாநிலங்களுக்குக் குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரயில்சேவையைத் தான் அதிகளவில் தேர்ந்தெடுக்கின்றனர். சவுகரிமாக மற்றும் குறைவாகக் கட்டணத்தில் செல்லக்கூடிய வசதிகள் இதில் உள்ளது. எனவே இதில் பயணம் செய்வதற்காக முன்கூட்டியே புக்கிங் செய்வதை மக்கள் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். ஆனால் சில பயணிகள் திடீரென பயணிக்கும் போது முன்பதிவுசெய்ய முடிவதில்லை. இதனையடுத்து அவர்கள் General coach ல் பயணிக்க நேரிடுகிறது. இதற்காக ரயில்நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் பயணிகள் மிகுந்த சிரமத்தைத் தான் சந்தித்துவருகின்றனர். சில நேரங்களில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.
எனவே இந்நிலையில் தான் இதுபோன்ற சிரமத்தைப்போக்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியைத் தென் மத்திய ரயில்வே மண்டலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் டோக்கன் மூலம் டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி டிக்கெட் கவுண்டர்களின் கால் கடுக்க நிற்காமல் எளிதில் இதனைப்பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ரயில் நிலையத்தில் பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தும் முறை:
இந்த பயோமெட்ரிக் இயந்திரத்தின் மூலம் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணியின் பெயர், PNR நம்பர் மற்றும் எந்த ஊருக்குச் செல்ல வேண்டுமா? இதுக்குறித்த தகவல்களைப் பதிவிட வேண்டும். இதனையடுத்து பயணிகளின் புகைப்படம் மற்றும் கைரேகை போன்றவற்றையும் பெற்றுக்கொள்கிறது.
இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் இந்த இயந்திரம் தானாகவே டோக்கன்களை பயணிகளுக்கு அனைத்துத் தகவல்களுடன் அளித்துவிடுகிறது. இதனால் 1 மணி நேரம் கால்கடுக்க நிற்காமல் வெறும் 5 நிமிடங்களில் ரயில் பயண டிக்கெட்டை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில் நிலையத்தில் அதிகமாகக் கூட்டம் கூடுவதைத்தவிர்க்க முடியும் என்று ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மக்களை ஒழுங்குப்படுத்தும் பணிகளை இனி ரயில்வே போலீசார் அதிகளவில் பயன்படுத்தத்தேவையில்லை எனவும், தற்போது பயோமெட்ரிக் முறையில் டிக்கெட் விநியோகம் நடைபெறுவதால் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றாலும் எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டம் பயணிகளுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக மற்றொரு பயோமெட்ரிக் இயந்திரம் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று மற்ற ரயில்நிலையங்களிலும் இந்த சேவையைத் தொடங்க வேண்டும் என்று ரயில் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகளவில் எழுந்துள்ளது.