அனைத்து வடிவ அப்பளங்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு இருப்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது அப்பள வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. தொழிலதிபர் ஹர்ஷ் கோயன்கா ட்வீட்டுக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசின் பதில் மூலம் அப்பள வியாபாரிகளுக்கு புதிய தெளிவு கிடைத்துள்ளது. இதன் மூலம் அப்பளம் எந்த வடிவத்தில், (அதாவது வட்டம், சதுரம், நீள்வட்டம்) இருந்தாலும் அதற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. 






முன்னதாக, ஆர்பிஜி என்டர்ப்ரைசஸ் நிறுவனர் ஹர்ஷ் கோயன்கா தனது ட்விட்டர் பக்கத்தில், "வட்ட வடிவ அப்பளத்துக்கு ஜிஎஸ்டி இல்லை. மற்ற வடிவ அப்பளத்துக்கு ஜிஎஸ்டி உண்டு. இதன் பின்னால் உள்ள தர்க்க ரீதியான உண்மைகளை அறிய நல்லதொரு பட்டயக் கணக்கரின் ஆலோசனை தேவைப்படுகிறது" என்று பதிவிட்டிருந்தார்.


அவருடைய இந்த ட்வீட்டுக்கு, மத்திய மறைமுக வரிவிதிப்பு மற்றும் சுங்கவரி வாரியம் (Central Board of Indirect Taxes and Customs) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ள ட்வீட்டில், "பப்பட்..அது என்ன பெயரில் அறியப்பட்டாலும் அதற்கு ஜிஎஸ்டியில் விலக்கு உண்டு. பதிவு எண் 96ன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. No.2/2017-CT(R) அறிவிக்கையில் இது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் படி அப்பளத்தின் வடிவம் ஜிஎஸ்டி விலக்கு பெறுவதற்கு தடையில்லை. இது தொடர்பான அறிவிப்பாணை http://cbic.gov.in இணையதளத்தில் கிடைக்கும்" என்றார். 


ஜிஎஸ்டி அல்லது சரக்கு சேவை வரி ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் என்பன உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.






இந்தியாவில் மது வகைகள், பெட்ரோல் தவிர அனைத்துப் பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல காலமாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட எரிபொருள் விலையை அரசு குறைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கு, மத்திய அரசோ முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெறப்பட்ட ஆயில் பாண்ட் எனப்படும் எண்ணெய் பத்திரங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள கடன் சுமை காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று கூறி வருகிறது.