ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாள்கள் ஆன பிறகும், பாஜக வென்ற மாநிலங்களில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் வென்ற தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி இன்று முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.
மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்க தலைவர் லால்டுஹோமா நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆனால், பாஜக வென்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
பாஜக வென்ற மாநிலங்களில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி:
இந்த நிலையில், பாஜக வென்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரை இறுதி செய்வதில் பாஜக மேலிடம் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று மாநிலங்களிலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை பார்வையாளர்கள் கேட்டறிய உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களின் முன்னிலையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடியையும் அரசு திட்டங்களையும் முன்னிறுத்தியே பாஜக பரப்புரை மேற்கொண்டது.
இந்த முறை புது முகங்களுக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் தற்போது முதலமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகானே முன்னிலையில் உள்ளார். மக்கள் மத்தியில் சிவராஜ் சிங் சவுகானுக்கு இருந்த செல்வாக்கு பாஜகவின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள் யார்? யார்?
மத்திய பிரதேச மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் சிங் படேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல, பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சத்தீஸ்கரிலும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பலரின் பெயர் அடிபடுகிறது. அதில் முக்கியமானவராக கருதப்படுபவர் டாக்டர் ராமன் சிங். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவராக உள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக 15 ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.
ராமன் சிங்குக்கு அடுத்தப்படியாக அதிகம் அடிபடும் பெயர் அருண் சாவோ. மாநில பாஜக தலைவரான அருண் சாவோ, பிலாஸ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய மற்றொருவர் ரேணுகா சிங். மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ளார்.