ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வாதம் என்ன?
மனிதர்களின் பொழுதுபோக்குக்கு விலங்குகளை பயன்படுத்தலாமா? நாட்டு மாடுகளை பாதுக்காக்க விளையாட்டு எப்படி அவசியமாகிறது? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ”ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு, கேளிக்கை அல்ல. இது வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு என்று வாதிட்டது.
”அதுமட்டுமல்ல பெரு, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் எருது சண்டையை தங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன. எனவே ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஆண்டுதோறும் விவசாயிகளால் பராமரிக்கப்படுகின்றன” என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.
தீர்ப்பு என்ன?
இவ்வாறாக அனைத்து வாதங்களும் நடந்து முடிந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ”ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாடு என்பதை ஏற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த ஒன்று. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமையை பெரும்பான்மையாக குறைந்துள்ளது. கலாச்சாரம் என்ற வகையில் இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும்பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை, சட்டம் செல்லும் சட்டத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா, கர்நாடாக மாநிலமும் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் சட்டல் அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியது தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க