National Medical Council: தேசிய மருத்துவ கவுன்சிலின் சின்னத்தில், இந்து கடவுளின் உருவப்படம் பொறிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


தேசிய மருத்துவ ஆணைய சின்னத்தில் இந்து கடவுள்:


தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் நான்கு தலைகள் கொண்ட சிங்கத்திற்கு பதிலாக,  ஆயுர்வேதத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு, சின்னத்தில் இருந்த இந்தியா என்ற பெயர் நீக்கப்பட்டு, பாரத் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. குறிப்பிட்ட மதத்தை மட்டும் போற்றும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த லோகோ மாற்றம் தவறான செய்தியை தருவதாகவும், கமிஷனின் அறிவியல் மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள பிரிவு விமர்சித்துள்ளது.


தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்:


இதுதொடர்பாக பேசிய தேசிய மருத்துவ ஆணையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “தன்வந்திரி லோகோ கிட்டத்தட்ட ஒரு வருடமாக பயன்பாட்டில் உள்ளது. முன்பு, இது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. எனவே அச்சுப்பொறிகளில் தெரியவில்லை. தற்போது லோகோவின் மையத்தில் வண்ண புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளோம்” என விளக்கமளித்துள்ளார்.


மற்றொரு அதிகாரி பேசுகையில், “உலக சுகாதார மையத்தின் சின்னம் கூட ஐக்கிய நாடுகளின் சின்னமான ஒரு  கோலை சுற்றிய பாம்பு அடையாளத்தை தான் கொண்டுள்ளது. இது நீண்ட காலமாக மருத்துவம் மற்றும் மருத்துவத் தொழிலின் அடையாளமாக இருந்து வருகிறது. ஆனால்,  இது பண்டைய கிரேக்கர்களால் குணப்படுத்தும் கடவுளாக மதிக்கப்பட்ட அஸ்க்லெபியஸின் கதையிலிருந்து உருவானது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. அதன் வழிபாட்டு முறை பாம்புகளைப் பயன்படுத்துகிறது. அப்படி இருக்கையில் தன்வந்திரியின் புகைப்படத்தை  பயன்படுத்தியில் தவறு இல்லையே” என பேசியுள்ளார். அதேநேரம், இந்த மாற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 


இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து:


தேசிய மருத்துவ கவுன்சிலின் சின்னத்தில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகு, அறிக்கை வழங்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


அடுத்தடுத்த சர்ச்சைகள்:


தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய  மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர் மாணவர் சேர்க்கை  விவகாரத்தில் விதிகளை மாற்றியது. இது தென்னிந்திய மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தடையாக இருந்தது. பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஓராண்டு காலத்திற்கு இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சை முற்றிலும் ஓய்வதற்கு முன்பாகவே, சின்னத்தில் மாற்றம் செய்து தேசிய மருத்துவ ஆணையம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.