உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. 


ஞானவாபி மசூதி:


ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் 10 நாள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட்ட அதன் அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு நான்காவது முறையாக  நீதிமன்றத்தின் சார்பாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய தொல்லியல் துறை  21 நாட்கள் நீட்டிப்பு கேட்டது, அதற்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. 5 பெண்கள் வளாகத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரியதை அடுத்து, ஜூலை 21 அன்று வாரணாசி நீதிமன்றத்தால் கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வலது சாரிகளின்  மனுவின் அடிப்படையில், வளாகத்தை வீடியோ ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 


அரசியல் சலசலப்பு:


புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. வலதுசாரி ஆர்வலர்கள் அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததாகவும், முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 17 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.


அயோத்தி மற்றும் மதுராவுக்குப் பிறகு, ஞானவாபி மூன்றாவது கோயில்-மசூதி வரிசையாகும், இதுபோன்ற செயல்கள் 80கள் மற்றும் 90களில் பாஜகவை தேசிய அரசியலில் பெரும் இடத்திற்கு உயர்த்தியது. 


உத்தரபிரதேசத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி மசூதி இத்கா தகராறு தொடர்பாக ஏற்கனவே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 


கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இது கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மசூதியை மாற்றக் கோரி உள்ளூர் நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


ஞானவாபி மசூதி


ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 


இதற்கு மத்தியில், இந்த மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 


இது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வேறு மனு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.


இதை தொடர்ந்து, வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ள இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 


விஸ்வ வேத சனாதன சங்கம் கோரிக்கை:


ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களை சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.