பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை அம்மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்று மாலை, ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.


பிகார் அரசியலை மீண்டும் புரட்டிபோட்டுள்ள இந்த முடிவு பற்றிய முக்கிய தகவல்களை கீழே காண்போம்.


ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை சந்தித்த பிறகு பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வது பற்றிய முடிவை எடுத்துள்ளார் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடனான கூட்டணியை முறிப்பது இது இரண்டாவது முறை. 


பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்காக நிதிஷ் குமார் அம்மாநில ஆளுநரை சந்தித்தார். அதன் பிறகு, ஆளுநரை இரண்டாவது முறையாக எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.


ஐக்கிய ஜனதா தள கூட்டணி விவகாரம் தொடர்பாக பாஜக பிகார் தலைவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். ‘‘கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் கடைபிடித்து வருகிறோம்’’ என கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.


மத்திய அமைச்சர் அமித் ஷா, ஐக்கிய ஜனதா தளத்தை பிளவுபடுத்த இடைவிடாமல் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், இரு கட்சிகளுக்கு இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 


கட்சி மீது முதலமைச்சரின் பிடியைக் குறைக்க பாஜக முயற்சிப்பதாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராக செயல்பட்டதாகவும், கூட்டணி கட்சிகளை அவமரியாதை செய்வதாகவும் பாஜக மீது நிதிஷின் கட்சி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. 


எம்எல்ஏக்கள் இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றும், அந்த வாய்ப்பை விட புதிய கூட்டணியை விரும்புவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பாஜகவை வீழ்த்தினால் அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளிப்பார் என எதிர்க்கட்சிகள் நேற்று தெரிவித்தன.


சமீபத்தில் பிகாரில் லாலுவின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆட்சி அமைக்க போதுமானதாக உள்ளது.


டெல்லியில் அமர்ந்து கொண்டு பிகார் அரசை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித் ஷா முயற்சித்து வருவதாகவும் இதன் காரணமாகவே நிதிஷ் கோபம் அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தனது எதிர்ப்பை பதிவு செய்ய, அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த பல முக்கிய கூட்டங்களை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். 


நேற்று, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.


இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார்  பார்த்து வந்தார். 


ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.