கடந்த இரண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல, அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு, வதோதரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மோடி, இரண்டையும் கைப்பற்றினார்.
பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். இச்சூழலில், அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியுடன்
தென் மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிடுவார் என தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
வாரணாசியில் தொகுதியை குறிவைக்கும் INDIA கூட்டணி:
குறிப்பாக, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் தொகுதியில் இருந்து மோடி போட்டியிடப் போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரபலமான அரசியல் தலைவர்களில் எவரேனும் ஒருவரை பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவைக்க INDIA கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.
அதில், பலரின் பெயர் அடிப்பட்டதாகவும் இறுதியின் இரண்டு பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமாரை பிரதமர் மோடிக்கு எதிராக களம் காண வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தியா? நிதிஷ் குமாரா?
கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தற்போது பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யும் முக்கிய தலைவர்களில் ஒருவராக நிதிஷ் குமார் கருதப்படுகிறார். INDIA கூட்டணியை உருவாக்குவதில் பல்வேறு முயற்சிகளை செய்தவர். சமீபத்தில் கூட, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என நிதிஷ் குமாரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி இல்லை என மறுத்துவிட்டார்.
கடந்த வாரம், பிகார் தலைநகர் பாட்னாவின் பல பகுதிகளில் நிதிஷ் குமாரை பிரதமராக முன்னிறுத்தக் கோரி பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால், தங்களுக்கும் போஸ்டர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நிதிஷ் குமாருக்கு அடுத்தப்படியாக முனுமுனுக்கபட்ட பெயர் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி, இதுவரை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. ஆனால், கடந்த தேர்தலிலேயே பிரதமர் மோடிக்கு எதிராக அவர் களம் காண உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் போட்டியிடவில்லை.