சமீபத்தில், பிகாரில் பள்ளி மாணவிகளிடம் பெண் ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் ஆணுறை வேண்டுமா என கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதையடுத்து, அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 


இருப்பினும், இந்த சம்பவம் அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில், இச்சம்வபத்திற்கு வருத்தம் தெரிவித்து அந்த பெண் ஐஏஸ் அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மாநில அளவிலான பயிலரங்கில், இலவச சைக்கிள் மற்றும் பள்ளி சீருடைகளை வழங்கும் அரசு, இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிய பள்ளி மாணவியிடம், ஆணுறை கேட்பீர்களா என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா ஆணவமாக பேசியுள்ளார்.


செப்டம்பர் 27ஆம் தேதி அன்று இச்சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


சர்ச்சையாக பேசியுள்ள பாம்ரா, மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலும் உள்ளார். இதையடுத்து, பாம்ராவுக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், முதலமைச்சர் நிதிஷிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த நிதிஷ், "செய்தித்தாள்கள் மூலம் நான் அறிந்த இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். மாநில பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளோம். ஐஏஎஸ் அதிகாரியின் நடத்தை நெறிமுறைகளுக்கு விரோதமாக இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


வைரலான அந்த வீடியோவில், "இதுபோன்ற இலவசங்களுக்கு எல்லையே இல்லை. அரசு ஏற்கனவே நிறைய கொடுக்கிறது. இன்று உங்களுக்கு ஒரு பாக்கெட் நாப்கின்கள் இலவசமாக வேண்டும். நாளை நீங்கள் ஜீன்ஸ் மற்றும் ஷூக்களை விரும்பலாம். பின்னர், குடும்பக் கட்டுப்பாடு நிலை வரும்போது, ​​இலவச ஆணுறைகளையும் கோரலாம்" என பாம்ரா தெரிவித்துள்ளார்.


இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்துக்கு விளக்கம் அளித்த பாம்ரா, "நான் சொன்ன கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். மாணவிகள் எவரையும் குறைகூறுவதற்காக அல்ல. மாறாக பெண்கள் சுயசார்புடையவர்களாக மாறுவதற்கு ஊக்குவிப்பதற்காகவே அந்த கருத்தை தெரிவித்தேன்.


ஒரு ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றவர்களை சார்ந்து இருக்க கற்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்ப்பின் போது பாகுபாடு காட்டப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பாக இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்" என்றார்.