பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டில், முதலமைச்சராக இருக்க மாட்டேன் என நிதிஷ் குமார் தெரிவித்திருந்த நிலையில், தேசிய அரசியலில் அவர் கவனம் செலுத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், பிரதமர் ஆசை எல்லாம் தன்னுடைய மனதில் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்கு நேர்மாறான கருத்துகளை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். "நிதிஷ் குமார் பிரதமர் போட்டியில் இல்லை. ஆனால் பிரதமராக வருவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. புதிய பீகார் அரசு செயல்படத் தொடங்கியதும், இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துக்கு வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவோம்" என்றார்.
எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க எந்த மாதிரியான பங்கை வகிப்பீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் செயல்படுவோம்" என நிதிஷ் பதில் அளித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, 8ஆவது முறையாக பீகார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு பேசிய நிதிஷ், பிரதமர் மோடி குறித்து விமர்சித்திருந்தார். "அவர் (மோடி) 2014ல் வெற்றி பெற்றார். ஆனால் 2024ல் வெற்றி பெறுவாரா?" என நிதிஷ் கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் வேட்பாளராக வருவீர்களா என கேள்வி எழுப்பியதற்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார்.
"மக்கள் என்ன சொன்னாலும், எனக்கு நெருக்கமானவர்கள் என்ன சொன்னாலும், அது என் மனதில் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும், அதை உறுதி செய்வதே என்னுடைய வேலை. நாம் அனைவரும் மக்களின் பிரச்னைகள் மற்றும் சிறந்த சமூக சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசுவோம்" என்றும் நிதிஷ் கூறியுள்ளார்.
பீகாரில் மாநில சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில், நிதஷ் குமார் தலைமையிலான மகாகத்பந்தன் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்