நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal) பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பிஹார் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது.
நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு ஆண்டுதோறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசகங்களை, சமூக, பொருளாதார, சூழலியல் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறது.
இதில் 2023- 24ஆம் ஆண்டில் நிலையான வளர்ச்சி இலக்கு மதிப்பெண் (NITI Aayog's SDG India Index ) 71 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த மதிப்பெண் 2020- 21ஆம் ஆண்டில் 66 ஆக இருந்தது. வறுமையை ஒழித்தல், கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த எண் உறுதி செய்கிறது.
யார் யாருக்கு எந்த இடம்?
எஸ்டிஜி எனப்படும் நிலையான வளர்ச்சி இலக்கு அளவீட்டைப் பொறுத்தவரை, கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய இரு மாநிலங்களும் 79 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளன. இதில் 78 மதிப்பெண்களோடு தமிழ்நாடு 3ஆம் இடத்திலும் 77 மதிப்பெண்களோடு கோவா 4ஆம் இடத்திலும் உள்ளன.
எனினும் நாகலாந்து மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மோசமான நிலையில் முறையே 62 மற்றும் 62 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. பிஹார் வெறும் 57 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் டெல்லி ஆகிய 5ம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
இந்த அறிக்கையைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த மதிப்பெண்களில் அனைத்து மாநிலங்களுமே முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
2018 மற்றும் 2023-24-க்கு இடைப்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் 25 மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெற்று வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக மாறியுள்ளது.
முழுமையான அறிக்கையை: https://www.niti.gov.in/sites/default/files/2024-07/SDG_India_Index_2023-24.pdf என்ற இணைப்பைக் க்ளிக் செய்து விரிவாக வாசிக்கலாம்.