முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மத்திய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் காட்டியுள்ளார் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்.


நாடாளுமன்றத்தில் ஒழுங்கற்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்பது பல காலமாக விதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை நடப்பு மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக பட்டியலிடப்பட்டன. அந்த வகையில் முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடைசெய்யப்பட்டது.


இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடந்தது. அப்போது தமிழில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை. மத்திய அரசு குறைப்பார்கள் ஆனால் நான் குறைக்க மாட்டேன் என்றிருக்கிறார்கள் என்று பேசியிருந்தார்.


முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மத்திய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் காட்டியுள்ளார் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்.






தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்னென்ன?


ஜூலை 18-ஆம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை மக்களவை செயலாளர் வெளியிட்டார்.


அதன்படி, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.


'jumlajeevi', 'baal buddhi' உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்த நாடாளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல் ஆகிய பொதுவான வார்த்தைகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 


இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.


முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் நாட்டிலுள்ள பல்வேறு சட்டப்பேரவைகளிலும், காமன்வெல்த் நாடாளுமன்றங்களிலும் அவ்வப்போது அவைத் தலைவரால் நாடாளுமன்றத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்படுகின்றன. 


நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும்போது, இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அது அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


நாடாளுமன்றத்தில் நடைபெறும் அனைத்து வாதங்களுமே எதிர்கால குறிப்புக்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், எந்த வார்த்தைகள், வாக்கியங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் மாநிலங்களவை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகரே இறுதி முடிவை எடுப்பர்.


இதில், சில வார்த்தைகளை தனித்தனியே பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை குறிப்பிட்ட வாக்கியத்தோடு சேர்த்த பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் தலைவருக்கு எதிராக ஆங்கிலம் அல்லது இந்தியில் கூறப்படும் கூற்றுக்கள், அவை நாடாளுமன்றத்திற்கு எதிரானவை எனக் கருதப்பட்டு, நாடாளுமன்றத்தின் பதிவுகளிலிருந்து நீக்கப்படும்.


இந்த நிலையில் தான் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.