கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க. எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.


சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், பிரகலாத்சில் படேல் உள்பட 10 எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் மத்திய அமைச்சர்களான தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் இன்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற ராகேஷ்சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.


மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு


மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சில அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவிற்கு உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் பொறுப்பும், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூடுதலாக ஜல்சக்தி அமைச்சக இணை அமைச்சராகவும், பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் விவகாரங்கள் துறையையும் இனி அவரவர்கள் ஏற்கனவே வகிக்கும் துறையுடன் கூடுதலாக கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் முண்டா வேளாண் துறையை கூடுதலாக கவனிக்க உள்ளார்.  அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.