நிர்ஜலா ஏகாதசி மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாள் முழுக்க முழுக்க பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நாளில் பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள ஏராளமான பக்தர்கள் நிர்ஜலா ஏகாதசி அன்று கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நிர்ஜலா ஏகாதசி பீமசேன ஏகாதசி, பாண்டவ ஏகாதசி மற்றும் பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நிர்ஜலா ஏகாதசி விரதம் இன்று, மே 31, 2023 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டில் வரும் அனைத்து ஏகாதசியை கடைப்பிடிக்காமல் விட்டாலும் இந்த நிர்ஜலா ஏகாதசி கடைபிடித்தால் போதுமானது


நிர்ஜலா ஏகாதசி விரதம்:


த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, நிர்ஜலா ஏகாதசி அன்று ஏகாதசி திதி அன்று அனுசரிக்கப்படும். அதாவது சுக்ல பக்ஷத்தின் 11வது நாள். ஏகாதசி திதி மே 30 ஆம் தேதி மதியம் 01:09 மணிக்கு தொடங்குவதால், பக்தர்கள் விரதத்தை மே 31 ஆம் தேதி சூரிய உதயத்திற்கு பின் தொடங்கலாம். இன்று காலை தொடங்கும் விரதம் நாளை துவாதசி திதியில் நிறைவு பெறுகிறது.  அதாவது ஜூன் 1, 2023 ஆம் தேதி பிற்பகல் 01:40 மணிக்கு நிறைவு பெறுகிறது.


ஜ்யேஷ்ட சுக்ல ஏகாதசி என்றும் அழைக்கப்படும் நிர்ஜலா ஏகாதசி இந்துக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். நிர்ஜலா விரதம் என்றால் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் விரதம் கடைப்பிடிக்கப்படும். துவாதசி திதியில் பக்தர்கள் விரதம் முடித்த பின்னரே நீர் அருந்தலாம். நிர்ஜலா ஏகாதசி விரதம் மிகவும் கடுமையான மற்றும் புனிதமான விரதங்களில் ஒன்றாகும். ஏராளமான பக்தர்கள் இந்த விரதத்தை மிகுந்த பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் கடைப்பிடித்து, விஷ்ணுவை வழிபடுகின்றனர்.


பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்த பின் பூஜை சடங்குகள் தொடங்குவார்கள். ஓம் நமோ பகவதே வாசுதேவயே என்ற இந்த மஹா மந்திரத்தை உச்சரித்து, மறுநாள் துவாதசி திதியில் விரதம் முடித்து தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ள வேண்டும்.


நிர்ஜாலா ஏகாதசியில் செய்யக்கூடாத சில விஷயங்கள்:



  • நிர்ஜல ஏகாதசி நாளில், துளசி இலைகளைப் பறிப்பது மங்களகரமானதாகக் கருதப்படாததால், துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது.

  • நிர்ஜாலா ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கட்டாயம் நீர் அல்லது உணவை எடுத்துக்கொள்ள கூடாது

  • நிர்ஜாலா ஏகாதசி அன்று சோப் அல்லது செயற்கை பொருட்களை பயன்படுத்தி குளிக்காமல் வெறும் நீர் மட்டும் பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

  • நிர்ஜாலா ஏகாதசி அன்று அரிசி உணவு எடுத்துக்கொள்ள கூடாது அதேபோல் அசைவ உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சாத்வீக உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

  • இறைவனுக்கு நெய்வேத்யம் கொடுக்க வேண்டும், அதேபோல் யாரையும் பழித்து அல்லது இழிவாக பேசக்கூடாது.