நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது.


இன்றைய நிலவரப்படி, மகாராஷ்ட்ராவில் 3,03,475 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 35,726 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.




மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாக்பூர், தானே, அமராவதி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்று முதல் மகாராஷ்ட்ரா முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை அமலில் இருக்கும்.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தூர், ஜபல்பூர் மற்றும் போபால் ஆகிய 3 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு நேர ஊரடங்கு இந்த வாரம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த நகரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.