கடந்த ஜூலை 8ஆம் தேதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடலூர் ரயில் விபத்து:
இந்த சம்பவம் நடைபெற்ற போது ரயில் வந்து கொண்டிருந்த நேரத்தில் ரயில்வே கேட் திறந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த ஊடகத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த விபத்தில் மனித உரிமைகள் மீறல் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய உடல்நிலை உள்பட இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே வாரிய தலைவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தானாக முன்வந்து விசாரிக்கும் NHRC:
கடந்த ஜூலை 9-ம் தேதி ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதையை அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளதாகவும், ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த ஒரு வருடமாக அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.