நாடு முழுவதும் கடந்த 2015-16ஆம் ஆண்டு மொத்த கருவுறுதல் விகிதம் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தைகள் எனக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய 2019-21ஆம் ஆண்டு இதே விகிதம் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 


தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு அறிக்கையில், `இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் படிப்படியாக குறைந்து வருவது தெளிவாகிறது. கடந்த 1992-93ஆம் ஆண்டு முதல் தற்போதைய 2019-21ஆம் ஆண்டு வரை ஒப்பிடும்போது, சுமார் 3.4 குழந்தைகள் என்ற அளவில் இருந்து தற்போது 2 குழந்தைகளாக குறைந்துள்ளன. கிராமப்புறங்களில் சுமார் 3.7 குழந்தைகள் என்பதாக 1992-93ஆம் ஆண்டில் இருந்த அளவு தற்போது 2.1 குழந்தைகள் என்பதாகவும், நகர்ப்புறங்களில் 1992-93ஆம் ஆண்டில் சுமார் 2.7 குழந்தைகள் என்ற அளவு, தற்போதைய 2019-21ஆம் ஆண்டில் சுமார் 1.6 குழந்தைகள் என்பதாகவும் மாற்றம் அடைந்துள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், தற்போது இந்தியாவில் இருக்கும் கருவுறுதல் விகிதம் என்பது மாற்று கருவுறுதல் விகிதமான சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற அளவில் இருந்து சற்றே குறைவாக இருப்பதையும் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு சுட்டிக் காட்டியுள்ளது. 


கருவுறுதல் விகிதம் என்றால் என்ன?


உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைகளின்படி, கருவுறுதல் விகிதம் என்பது மொத்த பெண்கள் தங்கள் கருவுறும் காலம்  தொடங்கி தங்கள் கருத்தரிக்கும் வயது முடியும் வரையிலான காலம் வரையிலான எல்லைக்குள் சராசரியாக எத்தனை குழந்தைகள் பெற முடியும் என்பது கருவுறுதல் விகிதம் என்ற கணக்கெடுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. 


மாற்று கருவுறுதல் விகிதம் என்பது ஒரு தலைமுறையின் இடத்தை மற்றொரு தலைமுறை பிடிக்கும் நேரத்தில் கணக்கெடுக்கப்படும் கருவுறுதல் விகிதம் ஆகும். பெரும்பாலான நாடுகளில் சராசரியாக இந்த விகிதம் ஒரு பெண்ணுக்கு சுமார் 2.1 குழந்தைகள் என நிர்ணயிக்கப்படுகிறது. 



மொத்த கருவுறுதல் விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


சுமார் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களின் கருவுறுதல் விகிதங்களின் கூட்டலாக மொத்த கருவுறுதல் விகிதம் கணக்கெடுக்கப்படுகிறது. மேலும், வயதுவாரியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளாக பிரிக்கப்பட்டு அவற்றின் கூட்டலையும் மொத்த கருவுறுதல் விகிதமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 


ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த பெண்கள் ஆண்டுதோறும் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையின் மூலமாக கருவுறுதல் விகிதம் கணக்கெடுக்கப்படுகிறது. 


மொத்த கருவுறுதல் விகிதம் என்பது சராசரியாக ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் என்ற அளவில் கணக்கிடப்படுகிறது.