2023 ஆம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020, 2021 ஆண்டுகள் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை கொடுத்த நிலையில், 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் பாதிப்பில்லாமல் மக்கள் மீண்டு வரும் அளவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. இதனிடையே 2023 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. புத்தாண்டுக்கு உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை ஆகியவை காரணமாக ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு அது மாறுபடும்.
அந்த வகையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது. இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. சாலைகள், கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதோடு, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட ட்வீட்டில், உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023 ஆம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டு வரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.