New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.

Continues below advertisement

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்:

தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றமானது, உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 

UIDAI-யின் மத்திய அடையாளத் தரவு களஞ்சியத்தில் மக்கள்தொகை அல்லது பயோமெட்ரிக் விவரங்களுடன் ஆதார் எண்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், டிக்கெட் விண்ணப்பதாரர்களின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படுகிறது. இது மோசடியான முன்பதிவுகளைக் குறைக்கும். இந்த நடவடிக்கை டிக்கெட் முன்பதிவு செயல்முறையை நெறிப்படுத்தும் மற்றும் பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறை:

புதிய அங்கீகார செயல்முறையில் கூடுதலாக, தங்களது தளத்தில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி என்ற படிப்படியான விளக்கங்களையும் ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பயனாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்தினை அணுகி, பயண விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கோட்டா ட்ராப் டவுன் மெனுவில் தட்கல் டிக்கெட் முன்பதிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் பயணியின் வயது, பாலினம், இருக்கை விருப்பம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு, டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்தும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பயண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, தட்கல் டிக்கெட்டிற்கான சாளரம் திறக்கப்படும். ஏசி பெட்டிகளுக்கு முந்தைய நாள் காலை 10 மணியளவிலும், ஏசி இல்லாத பெட்டிகளுக்கு முந்தைய நாள் காலை 11 மணியளவிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இந்த நடைமுறையானது பயணிகள் கடைசி நேரத்தில் எந்தவித அவசரமும் இன்றி பயணம் மேற்கொள்ள உதவுகிறது.

ஆதார் வெர்ஃபிகேஷன்:

புதிய விதிகளின்படி, வரும் ஜுலை 1ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP)  உறுதிப்பாடு கட்டாயமாகும். அதிகாரபூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபி (OTP)யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும்.  அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது ஏசி பெட்டிகளுக்கு காலை 10:30 மணி வரையிலும், நான் ஏசி பெட்டிகளுக்கு காலை 11:30 மணி வரையிலும் முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.

மோசடிகளை தடுக்க நடவடிக்கை:

போலி பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து, கடைசி நேரத்தில் கூடுதல் கட்டணத்திற்கு விற்பனை செய்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் அண்மையில் லட்சக்கணக்கான சந்தேக  ஐஆர்சிடிசி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் தான் சரியான நபர்கள் பயன்பெறும் வகையில், ஐஆர்சிடிசி கணக்குகள் உடன் ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.