வருவமான வரி செலுத்த வசதியாக ஏற்கெனவே இருந்த இ-தளம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக புதிதாக மாற்றப்பட்டது. இந்த புதிய தளம் மாற்றப்பட்டது முதல் நிறையே பிரச்னைகள் இருந்து வந்தது. குறிப்பாக பழைய தளத்தை போல் இந்த தளம் எளிமையானதாக இல்லை என்று நிறையே பேர் புகார் கூறி வந்தனர். அத்துடன் அவ்வப்போது இந்த தளத்தை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அந்தவகையில் நேற்று ஒருநாள் முழுவதும் இந்த தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த புதிய தளத்தில் தொடர்ந்து வரும் தொழில்நுட்ப பிரச்னை தொடர்பாக நேரில் வந்து இன்ஃபோசிஸ் சிஇஒ விளக்கம் அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், "வருமானவரி செலுத்தும் புதிய தளத்தில் இரண்டரை மாதங்களுக்கு பிறகும் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்னை தொடர்பாக இன்ஃபோசிஸ் சிஇஒ சலீல் பாரேக் நேரில் வந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் 23.08.2021(நாளை) விளக்கம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். அதில் அடுத்த 2-3 நாட்களுக்குள் புதிய வருமான வரி தளத்தில் உள்ள சிக்கல் அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய பின்பு நேற்று வரையும் அந்தப் பிரச்னை சரியாகவில்லை. இந்தச் சூழலில் ஏற்கெனவே இந்த தளத்தின் பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நந்தன் நீலகேனியிடமும் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் இந்த பிரச்னை முற்றிலும் சரி செய்து தரப்படும் என்று உறுதியளித்தாக தெரிகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நந்தன் நீலகேனியிடம் மத்திய அமைச்சர் குறுஞ்செய்தி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நாளை சலீல் பாரேகை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கேட்க உள்ளார். வருமானவரி செலுத்தவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 30ஆம் தேதி என்பதால் தற்போது பலரும் வருமான வரி செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சமயத்தில் வருமான வரி செலுத்தும் தளம் பிரச்னை தந்து வருவது அவர்களுக்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தலிபான்களின் ஆப்கான் கைபற்றலை காஷ்மீருடன் ஒப்பிட்ட மெகபூபா: பாஜக, காங்கிரஸ் கடும் கண்டனம்!