வடக்கு கோவாவில் உள்ள மோபாவில் சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.


மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் பெயரை அந்த விமான நிலையத்திற்கு சூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வடக்கு கோவா மோபாவில் 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் விமான நிலையம், மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையமாகும். ஏற்கனவே, டபோலிமில் ஒரு விமான நிலையம் உள்ளது.


முதற்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகள் வந்து செல்லலாம்.


 






டபோலிம் விமான நிலையம் ஆண்டுக்கு 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆனால், புதிய விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்திற்கான வசதி இல்லை.


வடக்கு கோவா ஏற்கனவே பிரபலமான சுற்றுலாத் தலமாக இருப்பதால், மோபாவில் உள்ள புதிய விமான நிலையம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.


புதிய விமான நிலையத்திற்கு மனோகர் பாரிக்கரின் பெயர் வைக்கப்படுமா என கேட்டதற்கு பதில் அளித்த பாஜகவின் கோவா பொறுப்பாளர் சி.டி.ரவி, "விமான நிலையத்திற்கு பாரிக்கரின் பெயர் சூட்டப்படுமா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. 


இருப்பினும், விமான நிலையத்துக்கு மறைந்த மத்திய அமைச்சர் பாரிக்கரின் பெயர் சூட்டப்பட்டால் பாஜக மகிழ்ச்சியடையும். விமான நிலையத்திற்கு (மனோகர்) பாரிக்கர் பெயரை வைத்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்" என்றார்.